மலையக மக்களுக்காக தனது இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அமரர் ஆறுமுகன்

அனுதாப பிரேரணை மீதான உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ

உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். இச் சந்திப்பின் போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை களைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார் என்று பிரதமர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணை மீதான உரையில் நேற்று தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமன்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசும் போது,

சௌமியமூர்த்தி, இராமநாதன், ஆறுமுகன் தொண்டமான் அவர்களை நினைவுகூரும் போது சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். இச் சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகன் தொண்டமான் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகன் தொண்டமான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமன்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை