நல்லாட்சி அரசு, முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்காது கமிஷன் கேட்டது

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறை கொள்ளாத கடந்த நல்லாட்சி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் கமிஷன் பெறுவதிலேயே குறியாக செயற்பட்டதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அத்தகைய சூழ்நிலையிலேயே சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள பின்வாங்கினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் நேற்று நடைபெற்ற மருந்து உற்பத்தித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு வைபவத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,

நாட்டில் மருந்து உற்பத்திகள் ஆரம்பிக்கப்படும் போது அதனை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி ஆறு மாதங்களுக்குள்  பெற்றுக் கொடுக்கப்படும். நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

மருந்து உற்பத்திக்கான சட்ட திட்டங்கள் நடைமுறையில் காணப்பட்டாலும் காலத்திற்குப் பொருத்தமான வகையில் தேவைக்கு ஏற்ப அந்த சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

மருந்து உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் பரிந்துரைக்கமைய நாட்டின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். அதேவேளை நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயங்கினர். அதற்கு காரணம் முதலீட்டாளர்களுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடமிருந்து கமிஷன் பெற்றுக் கொள்வதிலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முதலீடுகள் பெரும் பின்னடைவைக் கண்டன.

தற்போதைய அரசாங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் உற்பத்தி செய்வதோடு அதற்கான சலுகைகளையும் பெற்றுக்கொடுக்கும். இத்தகைய திட்டங்கள் மூலம் அரசாங்கத்துக்கு வருமானமும் பாரிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன உட்பட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் கலந்துகொண்டனர். (ஸ)

 

கொக்கலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை