டிக்டொக்கிற்கு இணையான தளத்தை யுடியுப் அறிமுகம்

டிக்டொக் செயலிக்கு இணையான தளத்தை இந்தியாவில் சோதனை செய்யவிருப்பதாக யுடியுப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் சிறிய வீடியோக்களைத் தயாரிக்க உதவும் அத்தகைய தளம் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய தளத்திற்கு ‘யுடியுப் சோட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

டிக்டொக் நிறுவனம் அமெரிக்காவில் தடைசெய்யப்படுவதைத் தவிர்க்க ஒராகில் நிறுவனத்துடன் இணைவதாக அண்மையில் தகவல் வெளியானது. இவ்வேளையில் யுடியுப் சோட்ஸ் தளம் அறிமுகம் கண்டுள்ளது.

கைத்தொலைபேசிகளில் குறுங்காணொளிகளைத் தயாரிக்க சோட்ஸ் வகைசெய்யும் என்று யுடியுப் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்தார். தளத்தின் மூலம் 15 விநாடி வீடியோக்களை தயாரிக்க முடியும்.

சோதனைக்குப் பின் திரட்டப்படும் கருத்துக்களை வைத்துத் தளத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

டிக்டொக் தளத்தின் வீடியோக்கள் உலகெங்கும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளைக் கண்காணிக்க சீனா அந்தச் செயலியைப் பயன்படுத்துவதாய் குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதற்குத் தடைவிதித்தார்.

இம்மாதம் 20ஆம் திகதிக்குள் சீன செயலியான டிக்டொக் அதன் அமெரிக்கச் செயல்பாடுகளை விற்கவேண்டும் என்று டிரம்பின் உத்தரவில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை