இரு ஆஸி. செய்தியாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றம்

கைதாவதை தவிர்ப்பதற்கு

சீனக் காவல்துறையினர் விசாரிக்க முற்பட்டதால் இரு அவுஸ்திரேலியச் செய்தியாளர்கள் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் பணியாற்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பீஜிங்கில் பணிபுரிந்த பில் பர்ட்டல்ஸ், ஷங்ஹாயில் பணிபுரிந்த மைக்கல் ஸ்மித் ஆகியோர் அவுஸ்திரேலிய இராஜதந்திர அலுவலகங்களில் சில நாட்கள் தஞ்சமடைந்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் நள்ளிரவில் பர்ட்டல்ஸின் வசிப்பிடத்திற்குச் சீன காவல்துறை அதிகாரிகள் சென்று, அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினர். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அவரை விசாரிக்கவிரும்புவதாக அந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பர்ட்டல்ஸ் உடனடியாக அவுஸ்திரேலியத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அதே நிலை ஷங்ஹாயிலிருந்த ஸ்மித்துக்கும் நேர்ந்தது. கடந்த மாதம் செங் லெய் என்ற அவுஸ்திரேலியச் செய்தியாளர் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

அதற்கான காரணத்தைச் சீன நிர்வாகம் வெளியிடவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலியத் தூதரக அதிகாரிகளுடன் பர்ட்டல்ஸ், ஸ்மித் இருவரும் நேற்று சிட்னியை வந்தடைந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று சீனாவில் ஆரம்பித்தது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைகளில் அவுஸ்திரேலியா முன்னணி வகித்தது.

அதன் காரணமாக சீனாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டது.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை