ஆப்கான் குண்டு தாக்குதலில் துணை ஜனாதிபதி தப்பினார்

ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ்வின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து தலைநகர் காபுலில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியபோதும் பத்துப் பேர் பலியாகியுள்ளனர்.

இந்த வெடிப்பு இடம்பெற்ற விரைவில் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட வீடியோவில், கையில் கட்டுடன் தோன்றிய சலேஹ், தாம் அலுவலகம் செல்லும் வழியிலேயே தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“நான் நன்றாக உள்ளேன. எனது காவலர்கள் சிலர் காயமடைந்தனர். காரில் என்னுடன் இருந்த எனது மகன் மற்றும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று சலேஹ் குறிப்பிட்டார்.

முன்னாள் உளவுப் பிரிவுத் தலைவரான சலேஹ் தலிபான்களை எதிர்க்கும் முக்கிய புள்ளியாக இருப்பதோடு இதற்கு முன்னர் பல படுகொலை முயற்களில் இருந்து தப்பியுள்ளார்.

பத்து சடலங்கள் மற்றும் காயமடைந்த 12 பேர் காபுல் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

நகர்புற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்காவுடனான உடன்படிக்கையில் இணங்கிய தலிபான்கள் இதற்கு பொறுப்பேற்க மறுத்தனர்.

இந்நிலையில் தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையே கட்டார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை