கட்சி பேதமின்றி அனைவருடனும் நட்பாக பழகும் இயல்புடைய தலைவர்

அமரர் ஆறுமுகன் குறித்து சஜித் பிரேமதாச உரை

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக செயற்பட்டவரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, பாராளுமன்றத்திலும் வெளியிலும் எவ்வித கட்சி பேதமுமின்றி நட்புடன் பழகிய தலைவராக அவரை பார்க்க முடிகிறதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவுக்கும் ஆறுமுகன் தொண்டமானின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. பிரஜா உரிமை இல்லாதிருந்த இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்உரிமையை பெற்றுக் கொடுப்பதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவரது மறைவானது இந்த ஜனநாயக நாட்டில் எமக்கும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களுக்கு பேரிழப்பாகும். அந்த வகையில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்ரமணியம் நிஷாந்தன்

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை