ஹரினின் கூற்றுக்கு மெல்கம் ரஞ்சித் கண்டனம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ வழங்கிய வாக்கு மூலத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை உட்பட அனைத்து ஆயர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியம் தொடர்பான செய்தி ஊடகங்கள் மூலம் அறிய வந்தபோது தாமும் ஆயர் பேரவையின் அனைத்து ஆயர்களும் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாக பேராயர் மெல்கம் ரஞ்சித்ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற ஈஸ்டர் தினத்தன்று காலையில் முக்கியமான ஆலயங்களில் திருப்பலி பூஜைகள் நடத்தப்படவில்லை என்றும் அதற்கு காரணம் ஏற்கனவே மேற்படி தாக்குதல் தொடர்பில் பேராயர் அறிந்திருந்தமையே என்றும் ஹரின் பெர்னாண்டோ தன்னிச்சையாக விசாரணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்த வாக்குமூலமானது பேராயர் மீது சுமத்தப்படும் அநீதியான குற்றச்சாட்டு என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழமைபோன்று ஈஸ்டர் இரவு அதாவது, ஏப்ரல் இருபதாம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டதாகவும் அந்த திருப்பலி பூசை விடியற்காலை 2 மணி வரையும் தொடர்ந்ததாகவும் அதனையடுத்து மறுநாள் காலை பேராயர் இல்லத்தில் அவரால் திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தெரிவிக்கின்றது.

அந்த வகையில்ஹரின் பெர்னாண்டோ எம்பி வழங்கியுள்ள வாக்கு மூலம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பேராயரோ அல்லது எந்த ஒரு கத்தோலிக்க குழுக்களோ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எந்த விதத்திலும் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றும் கொழும்பு உயர்மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 09/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை