பங்களாதேஷ் தொடருக்காக பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரர்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்காக அடுத்த வாரம் முதல் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது.

இம்மாத இறுதியில் இலங்கை வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை வீரர்களுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில், குறித்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பிக்கவிருக்கின்றது.

இலங்கை அணியின் பயிற்சிகள் அடுத்த புதன்கிழமை (9) தொடக்கம் ஆரம்பமாகவிருக்கின்றன.

இலங்கை – பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்த மாதம் விளையாடவிருக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் நடைபெறவிருந்து கொவிட்-19 வைரஸ் காரணமாக முன்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவரும் பங்களாதேஷ் அணி இலங்கை வந்து 14 நாட்கள் கொண்ட சுயதனிமைப்படுத்தல் முகாமில் பங்கெடுத்த பின் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு அவர்கள் இலங்கையுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் கடந்த ஆறு வருடங்களில் விளையாடுகின்ற முதலாவது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக அமையவிருக்கின்றது. இன்னும், இலங்கை – பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் விளையாடும் முதல் சர்வதேச தொடராகவும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் கழக அணிகள் இடையில் நடாத்திய மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் திறமை காட்டிய வீரர்களுடன் சேர்த்து, 23 பேர் அடங்கிய இலங்கையின் டெஸ்ட் குழாத்தினை தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் திறமை காட்டிய இளம் துடுப்பாட்டவீரர் லஹிரு உதார மற்றும் இளம் சுழல் பந்துவீச்சாளர் துவிந்து திலகரட்ன ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீரர்களில் லஹிரு உதார நடைபெற்று முடிந்த கழக அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் 86.58 என்கிற சராசரியுடன் 1,039 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, துவிந்து திலகரட்ன 20 இற்கு குறைவான பந்துவீச்சு சராசரியுடன் 61 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான சந்துஷ் குணத்திலக்க, இளம் சகலதுறைவீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்னாந்து ஆகியோரும் பங்களாதேஷுக்கு எதிராக பயிற்சி பெறவிருக்கும் இலங்கையின் டெஸ்ட் அணியில் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

மறுமுனையில் சிறிய உபாதை ஒன்றினை எதிர்கொண்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் பயிற்சிகளுக்காக இலங்கை டெஸ்ட் அணியில் இணைவார்கள் என நம்பப்படுகின்றது.

பயிற்சிகளுக்கான இலங்கையின் டெஸ்ட் அணியில் சிரேஷ்ட வீரர்களான தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா போன்றவர்களும் அடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sat, 09/05/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை