என்ஜின் செயலிழந்துள்ளதால் தெற்கு கடற்கரையை நோக்கி நகரும் கப்பல்

கடற்படை, விமானப்படை களத்தில் என்கிறார் இராணுவத் தளபதி

தீ விபத்துக்குள்ளாகிய கப்பலின் என்ஜின் செயலிழந்துள்ளதால் அது இலங்கையை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது.

கப்பல் 38 கடல் மைல்கள் தொலைவில் இருந்தபோதும் தற்போது அது 22 கடல் மைல்கள் தொலைவில்தான் உள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரையை நோக்கியே இந்தக் கப்பல் தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கப்பல் தொடர்பிலான அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் முயற்சியில் கடற்படையும் விமானப்படையும் எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

கப்பலால் எவ்வித பாதிப்பும் நாட்டுக்கு ஏற்படாத வண்ணமும் தீயை கட்பாட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடற்படை, விமானப்படை மற்றும் உரிய அரச நிறுவனங்கள் ஊடாக எடுத்துள்ளோம்.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பின் சங்கமன்கண்டிக்கு 38 கடல் மைல்கள் தொலையில் பனாமா நாட்டுக்கு சொந்தமான எண்ணைக் கப்பலொன்று ஈராக்கிலிருந்து இந்தியா நோக்கி பயணத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீ விபத்துக்குள்ளானது.

இந்தத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை கடற்படையும் விமானப் படையும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கப்பலில் தீ பரவ ஆரம்பித்தவுடன் கப்பலில் இருந்தவர்கள் அருகில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படைக்கு தகவல் வழங்கப்பட்ட உடனே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் கடற்படையும் விமானப்படையும் எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்துள்ளனர். தண்ணீருக்குப் அப்பால் தீயை அணைக்கும் திரவியங்களும் பாவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கப்பலில் உள்ள 2,70,000 தொன் மசகு எண்ணைத் தொடர்பிலேயே எமது நாட்டில் உள்ளவர்கள் தற்போது அச்சம் அடைந்துள்ளனர். இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுத்துள்ளோம். இந்தியா எமக்கு உதவிகளை வழங்கி வருகிறது. ஏனைய சில நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

சில கப்பல்களை கொண்டுசென்று குறித்த கப்பல் இலங்கையை நோக்கி நகர்வதை தடுப்பதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். சிலவேளை கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அது இலங்கையின் கரைக்கு வராதவண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கைளையும் கடற்படை மற்றும் உரிய அரச நிறுவனங்கள் ஊடாக எடுக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை