ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை பணிகள் துரிதம்

இரத்தினபுரியிலிருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியால பயணம்

கொழும்பையும் இரத்தினபுரியையும் இணைக்கும் ருவன்புற அதிவேக நெடுஞ்சாலையின் அமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நெடுஞ்சாலைகள் காரியாலய பொறியியலாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இந்த அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் இரத்தினபுரியிலிருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியால துரித பயணத்தில் சென்றடையலாம் என மாவட்டநெடுஞ்சாலைகள் பொறியியலாளர் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக பிரதான சந்தியான கஹதுடுவ நுழைவாயிலில் இருந்து பெல்மதுளை வரையிலான 73. 9 கிலோ மீற்றர் வீதியே இத்திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கிணங்க இதன் முதற் கட்டப்பணிகள் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையுள்ள 23.4 கிலோ மீற்றர்களும் இரண்டாம் கட்ட பணிகள் இங்கிரிய முதல் இரத்தினபுரிவரையுள்ள 21 கிலோ மீற்றர்களும் மூன்றாம் கட்டமாக இரத்தினபுரி முதல் பெல்மதுளை வரையிலான 28.6 கிலோ மீற்றர்களும் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் மூன்று வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான இதன் முதற்கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் 80 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அந்நிறுவனங்களுக்கு அதிகளவு நிதியை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் அமைப்புப் பணிகளை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

 

Sat, 09/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை