ஒக்டோபர் நான்கில் உம்றா யாத்திரை மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏழு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட உம்றா யாத்திரைக்கு வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்லாமிய புனிதத் தலங்களில் கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்றா யாத்திரை இடைநிறுத்தப்பட்டதோடு உலகெங்கும் இருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடும் ஆண்டின் ஹஜ் கடமையும் மட்டுப்படுத்தப்பட்டதாக இடம்பெற்றது.

இந்நிலையில் முதல் கட்டமாக வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து உம்றா வழிபாட்டில் ஈடுபட ஒரு நாளைக்கு சவூதி அரேபியாவுக்குள் இருக்கும் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் 6,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உம்றாவில் பங்கேற்போர் எண்ணிக்கை நாளுக்கு 20,000 ஆக அதிகரிக்கப்பட்டு வரும் நவம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் சவூதிக்கு வெளியில் உள்ள யாத்திரிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவுள்ளது. உலகில் மில்லியன் கணக்கான முஸ்லிம்களை ஈர்க்கும் உம்றா யாத்திரை ஆண்டின் எந்த நேரத்திலும் ஈடுபட முடியுமான வழிபாடாகும்.

இந்தப் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் விலகும்போது முழுமையான வழக்கமான அளவில் யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 330,000க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 4,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை