சவூதியின் அதிகாரிகள் பலர் திடீர் பணி நீக்கம்

அரச குடும்பத்தின் இரு உறுப்பினர்கள் உட்பட பல சவூதி அரேபிய அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சவூதி தலைமையிலான யெமன் கூட்டணியின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள இளவரசர் பஹத் பின் துர்கி தமது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு மன்னர் சல்மானின் அரச ஆணை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

அவரது மகனான அப்துல் அஸிஸ் பின் பாஹத் பிரதி ஆளுநர் பதவி ஒன்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தில் அவருடன் மேலும் நால்வர் விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

சவூதி மன்னரின் மகனும் முடிக்குரிய இளவரசருமான முஹமது பின் சல்மான் அந்நாட்டில் மறைமுக ஆட்சி புரிபவராக பார்க்கப்படுவதோடு, அரசில் ஊழல் விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எனினும் முடிக்குரிய இளவரசர் அதிகாரத்தில் இருப்பதற்கான முட்டுக்கட்டைகளை அகற்றும் நடவடிக்கையாகவே உயர் அதிகாரிகள் மீதான செயற்பாடுகள் இருப்பதாக விமர்சகர்கள் பார்க்கின்றனர். 

இந்த ஆண்டு ஆரம்பதில் மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அஹமது பின் அப்துல் அஸிஸ் மற்றும் முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் முக்கிய நிகழ்வாக 2017இல் ரியாதில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் பலரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

சவூதி அரசுடன் மொத்தம் 106.7பில்லியன் டொலர் வரை உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மிகவும் பழமைவாத நாடான சவூதிக்கு, 2016ஆம் ஆண்டு முடிக்குரிய இளவரசரான பின் தாம் மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் 35வயதாகும் முகமது பின் சல்மான் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.

எனினும் அவர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முஹமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு உள்ளது.

Wed, 09/02/2020 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை