பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை; இயல்புநிலை பாதிப்பு

கொழும்பின் பல பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதனால் பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரமொன்று பெயர்ந்து விழுந்திருப்பதைப் படத்தில் காணலாம். (படம்: எஸ்.பிரணவேஷ்)

நாட்டில் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கடும் மழை காரணமாக கரையோரப் பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். மேலும் சீரற்ற காலநிலை தொடரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், மீனவர்கள் மறு அறிவித்தல்வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களில் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50- -60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் அதிகமாக

காணப்படுகின்றது. கடற்கரையோரங்களில் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். வானிலை மாற்றம் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடற்பரப்புகள் அவ்வப்போது கடல்; கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவ சமுதாயம் காலநிலை குறித்த உரிய தெளிவுடன் பணியை முன்னெடுக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் மற்றும் மாலை வேளையில் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, களுத்தறை, கம்பஹா, அம்பாறை உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் வீசி கடும் காற்றுக் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில பகுதிகளில் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகர் வீதிகளும் நீரில் முழ்கியிருந்தன. கடும் காற்றுடனான வானிலை காரணமாக மீன சமூகத்தை கடலுக்குச் செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களமும், கடற்றொழில் திணைக்களமும் அறிவுறுத்தியுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 09/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை