பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாக கொள்ள வேண்டும்

தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம் எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும் அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.

“நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள் கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார் அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப் பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம் தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர் உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை