சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குத் தொடுநர் பாட்டு பென்சவுதா உட்பட மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த நீதிமன்றம் சட்டவிரோதமாக அமெரிக்கர்களை தமது சட்ட வரம்புக்கு உட்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக் நகரைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நீதிமன்றம் தற்போது ஆப்கானில் அமெரிக்கப் படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது தொடக்கம் அதற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வரும் அமெரிக்கா, அந்த நீதிமன்றத்துடன் இணையாத நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தடையை கண்டித்திருக்கும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் பல்கீஸ் ஜர்ராஹ், “மோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் அமெரிக்கா தாழ்வான நிலைக்கு சென்றிருப்பது வெட்ககரமானது” என்றார்.

2002 ஐ.நா உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தேசிய நிர்வாகங்கள் நீதி வழங்காத நிலையில் அதில் தலையிட்டு இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு நீதி வழங்குவதோடு விசாரணைகளை நடத்துகிறது. 123 நாடுகள் உடன்படிக்கையை ஏற்றபோதும், அமெரிக்காவுடன் சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா அதில் இணைய மறுத்தன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆபிரிக்கர்களை நியாயமற்று இலக்கு வைப்பதாக சில ஆபிரிக்க நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

முன்னதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களின் சொத்துகளை முடக்கி அவர்கள் அமெரிக்காவுக்கு நுழைவதை தடுக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை