இறைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வது குறித்து ஆலோசனை

முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்கிறார் மஸ்தான் எம்.பி

இறைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவ னம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஆளும் தரப்பு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக ஆளும் தரப்பு எம்.பிக்கள் பலரும் தெரிவித்தனர். ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.  இதன் போது 20 திருத்தம் நாட்டின் தற்போதைய பொருளாதார சமூக நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 20 ஆவது திருத்தம்,13 ஆவது திருத்தம் மற்றும் இறைச்சிக்காக மாடறுப்பதை தடைசெய்தல் என்பன குறித்து பேசப்பட்டதாக குறிப்பிட்டார்.இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்துள்ளார்.

ஆளும் தரப்பு பாராளுமன்ற கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த காதர் மஸ்தான் எம்.பி, இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. யாரும் யோசனை முன்வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமக, கூறுகையில்,

இறைச்சிக்காக மாடறுக்கும் யோசனை பிரதமர் முன்வைத்தார். இதற்கு வரவேற்புள்ளது. உள்நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தி தன்னிறைவு காண திட்டமிடப்பட்டுள்ளது. இறைச்சிக்காக காளை மாடுகள் அறுக்கப்படுவதால் அவற்றின் தட்டுப்பாடுள்ளது என்றார்.

இதேவேளை 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டதாக அறிய வருகிறது. (பா)

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை