உலகில் கொரோனா தொற்று 30 மில்லியனைத் தாண்டியது

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் நேற்று 30 மில்லியனை கடந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தரவு மூலம் உறுதியாகியுள்ளது. இது நோய்த் தொற்று இன்னும் பலவீனம் அடையாததையே காட்டுகிறது.

கொவிட்–19 தொற்றின் புதிய மையப்புள்ளியாக இந்தியா மாறியிருப்பதோடு வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைத்த பிராந்தியத்தில் உலகில் பாதி அளவான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அண்மைய தினங்களில் சாதனை அளவுக்கு நாளாந்த நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் ஒரு மில்லியனை நெருங்கியுள்ளது. வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றை மேம்படுத்துவதற்கு சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதன்படி ஆண்டுதோறும் பதிவாகும் கடுமையான காய்ச்சல் நோயை விட கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் ஐந்து மடங்காக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நோய் அரும்பு காலத்திற்கு இரண்டு வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் இந்த வைரஸினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி இருப்பது ஒரு பின்தங்கிய நிலையாகவே கருதப்படுகிறது. எனினும் சளிக்காய்ச்சலுடன் தொடர்புபட்டு ஆண்டுதோறும் உயிரிழக்கும் 290,000 தொடக்கம் 650,000 எண்ணிக்ைகயை விட இது அதிகமாகும்.

கடந்த புதன்கிழமை அமெரிக்காவுக்கு அடுத்து 5 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான ஒரே நாடாக இந்தியா இடம்பெற்றது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவில் கடந்த ஓகஸ்ட் தொடக்கம் அமெரிக்காவை விடவும் நாளாந்தம் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. இது உலக தொற்று சம்பவங்களில் 16 வீதமாக உள்ளது.

உலக நோய்த் தொற்று சம்பவங்களில் சுமார் 20 வீதத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் உலக வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் 15 வீதம் பதிவாகியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று 25 மில்லியனில் இருந்து 30 மில்லியனைத் தொட 18 நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளது.

இதுவே 20 மில்லியனில் இருந்து 25 மில்லியனைத் தொடுவதற்கு 20 நாட்களும் 15 மில்லியனில் இருந்து 20 மில்லியனைத் தொடுவதற்கு 19 நாட்களும் எடுத்துக்கொண்டுள்ளது.

சில இடங்களில் தொற்று பெரிய அளவில் தாக்கம் செலுத்திய நிலையில் பல நாடுகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் உலகில் நாளாந்த நோய்த் தொற்று வேகம் குறைவடைந்துள்ளது.

எனினும் பல நாடுகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளே இடம்பெற்று வருவதால் நோய்த் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை