263 இல் 21 கழிவுக் கொள்கலன்கள் கப்பலில் மீள் ஏற்றுமதி

263 இல் 21 கழிவுக் கொள்கலன்கள் கப்பலில் மீள் ஏற்றுமதி-21 Out of 263 Garbage Containers Re Exported to UK-Customs

சுங்கத் திணைக்களத்தினால் நடவடிக்கை

சர்வதேச சட்டதிட்டங்களை மீறி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கொள்கலன்களில் 21 கழிவுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் கடந்த காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதன் ஒரு பகுதி நேற்று (26), கொழும்பு துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு திருப்பியனுப்ப சுங்கத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2017 டிசம்பரில், இங்கிலாந்திலிருந்து சட்டவிரோதமாக 263 கழிவுக் கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதில் 21 கொள்கலன்கள் SEAMAX NORWALK, (V/039R) கப்பலில் ஏற்றப்பட்டு நேற்றையதினம் (26) பிற்பகல் 5.15 மணியளவில் கொழும்பு துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு திருப்பியனுப்ப, இலங்கை சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த 263 கழிவுக் கொள்கலன்களில் தற்போது 242 கொள்கலன்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 112 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் உள்ளதோடு, மேலும் 130 கொள்கலன்கள், கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திலுள்ள வர்த்தக கேந்திரநிலையத்தின் ( hub operation) கட்டுப்பாட்டின் கீழ் இன்னும் உள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுங்கச் சட்டத்தை மீறி கொண்டுவரப்பட்ட இக்கழிவு கொள்கலன்களில், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் மாத்திரமன்றி நகரங்களில் சேர்க்கப்பட்ட கழிவுகளும் உள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் இவை இலங்கையிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டியிருந்த போதிலும் அவ்வாறு செய்யப்படவில்லை என, சுங்கத் திணைக்களம் சுட்டிக்க காட்டியுள்ளது.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் பங்காளிகளாக இருக்கின்ற, சர்வதேச ஒப்பந்தமான பாசல் உடன்படிக்கையின் (Basel Convention) கீழ் இவ்வாறான கழிவுப் பொருட்களை மற்றுமொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு முன், இறக்குமதி செய்யும் நாட்டிடமிருந்து முன்னனுமதி பெறுவது ஒரு நிபந்தனையாகும். இங்கே இந்நிபந்தனை மீறப்பட்டுள்ளது.

கப்பல் மூலம் மீள ஏற்றுமதி செய்யும் குறித்த நடவடிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியன குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாக, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கழிவுகளை கப்பல் மூலம் மீள் ஏற்றுமதி செய்யப்படுவது,தெற்காசிய பிராந்தியத்தில் இதுவே முதல் முறையாகும் என, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது

இந்நடவடிக்கையில் சட்ட மாஅதிபர், அணுசக்தி அதிகாரசபை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார அமைச்சு, துறைமுக முனையங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களும் உதவியுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித் ரவிப்ரிய மற்றும் பல்வேறு மட்டத்திலுள்ள சுங்க அதிகாரிகளும் இந்நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்துள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Sun, 09/27/2020 - 20:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை