2,500 ஆண்டுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்து இடுகாடு ஒன்றில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 27 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தலைநகர் கெய்ரோவின் தெற்காக சக்காராவில் ஒரு புனிதத் தளத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு ஒன்றுக்குள் இருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இம்மாத ஆரம்பத்தில் பதின்மூன்று சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 14 தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இது உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, மரத்தாலான, நன்கு பாதுகாக்கப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சக்காரா 3000 ஆண்டுகளுக்கு மேல் இடுகாடாக இருந்திருப்பதோடு அது தற்போது யுனெஸ்கோவின் உலக மரபுரிமைத் தளமாகவும் உள்ளது.

“இந்த சவப்பெட்டிகள் முற்றாக மூடப்பட்டிருப்பதும் அவை புதைக்கப்பட்டது தொடக்கம் இதுவரை திறக்கப்படவில்லை என்பதும் ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் தெரியவருகிறது” என்று எகிப்து தொல்பொருள் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த சவப்பெட்டிகள் குறித்து மேலும் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை