கொரோனா தடுப்பூசிக்கு முன் 20 இலட்சம் பேர் இறக்கலாம்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன் உலக அளவில் 20இலட்சம் மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 10இலட்சத்தை நெருங்கியுள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் கொரோனா தடுப்புூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலை பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20இலட்சம் மக்கள் கொரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். 

மேலும் உலகத் தலைவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனக் குறிப்பிட்டார். இந்த வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் ஏழு மில்லியனைத் தாண்டி இருக்கும் நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலகின் மொத்த தொற்று எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமானதாக இது உள்ளது.    

Mon, 09/28/2020 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை