20 இளம் வீரர்களுக்கு ‘க்ரிஸ்போ’ நிறுவனத்தினால் புலமைப்பரிசில்

சர்வதேச பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான இளம் வீரர்கள் 20 பேரை தெரிவுசெய்து 4 கோடி ரூபா பெறுமதியிலான புலமைப்பரிசிலை வழங்குவதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 2022 இல் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா, ஆசிய இளையோர் விளையாட்டு விழா, பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் தெற்காசிய விளையாட்டு விழாக்களை இலக்காகக் கொண்டு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து க்ரிஸ்ப்ரோ நிறுவனம் குறித்த வேலைத்திட்டத்துக்கு அனுசரணை வழங்கவுள்ளது.

அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கும் வகையில் இந்நாட்டில் உள்ள திறமையான வீரர்களை ஊக்குவித்து அவர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் பாரிய நிதியொன்றை பயன்படுத்தவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

க்ரிஸ்போ நெக்ஸ்ட் சேம்ப் புலமைப்பரிசில் வேவைத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த (24) இலங்கை மன்றத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, க்ரிஸ்போ நிறுவனத்தின் வர்த்தக மற்றும் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமரெஸ் செல்ல, இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கனிஷ்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களில் இருந்து எஞ்சிய 15 வீரர்களும் தெரிவு செய்யப்படும் என தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

”நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் தம்மிடம் உள்ள திறமையான வீரர்களின் பெயர்களை அனுப்பி வைக்கும்படி நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம்.

இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த நட்சத்திர வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க தலைமையிலான குழுவினால் இந்த வீரர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

அதில் தேர்வாகும் வீரர்களுக்கு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தப் புலமைப்பரிசில் ஊடாக வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுப்பனவு ஒன்று வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்சிகள், போசாக்கான உணவுகள், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.

20 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ள நிலையில், அண்மையில் ஐந்து வீரர்களுக்கு வைபவ ரீதியாக புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

குருநாகல் சென். ஜோன் கொத்தலாவல கல்லூரியின் மெய்வல்லுநர் வீரர் சிதும் ஜயசுந்தர, வலல ஏ ரத்னாயக்கா கல்லூரியின் மெய்வல்லுநர் வீராங்கனை தரூஷி கருணாரத்ன, பத்தேகம அநாகரிக தர்மபால கல்லூரியின் பளுதூக்கல் வீரர் தேஷான் கபில குமார, போத்திவெல மகா வித்தியாலயத்தின் பளுதூக்கல் வீராங்கனை சச்சினி ராஜிகா லக்சரானி மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா உள்ளிட்டோருக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை