20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிப்பு; எதிரணி எதிர்ப்பு

நீதியமைச்சர் அலிசப்ரி சட்ட மூலத்தை சமர்ப்பித்தார் கறுப்புப்பட்டி அணிந்து உறுப்பினர்கள் போராட்டம்

சஜித் தரப்பின் எதிர்ப்பிற்கு மத்தியில் அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்தும் பதாகைகள் ஏந்தியும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டதோடு சபை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதமே நேற்று நடைபெற்றாலும் எதிரணி தொடர்ச்சியாக  20 ஆவது திருத்தத்திற்கு எதிராக கோசமெழுப்பினர். இருந்தாலும் பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றதோடு ​கோசத்திற்கு மத்தியில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் உரையாற்றினர். பாராளுமன்றம் நேற்றுக் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. தினப்பணிகளை தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி​ரேமதாச, 20 ஆவது திருத்தம் குறித்து கேள்வி எழுப்பினார்.

ஜனநாயகத்திற்கு கருப்பு தினமான (இன்று) நேற்று 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு சர்வாதிகாரத்திற்கு அடித்தளம் இடப்படுவதாக கூறினார். அவர் கேள்வி எழுப்பிய நிலையில் எதிரணியிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எழுந்து நின்று 20 வேண்டாமென கோசம் எழுப்பினர்.

இந்த நிலையில் நீதி அமைச்சர் அலி சப்ரி , 20 ஆவது திருத்தத்தை சபையில் சமர்ப்பித்தார்.

இதற்கு சஜித் தரப்பு கடும் ஆட்சேபனை முன்வைத்து கருப்புப்பட்டி அணிந்து பாதாதைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.இருந்தாலும் சபாநாயகர் தினப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் ஆரம்பமானது. ஆனால் சஜித் தரப்பு பதாதைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.

எதிரணியின் கோஷத்திற்கு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஆகியோர் உரையாற்றினர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பல தடவை ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக தமது கருத்தை முன்வைத்தார்.சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்துச் செய்து ஜனநாயக விரோத சட்டங்களை கொண்டுவர முயல்வதாக குறிப்பிட்டார். அவர் உரையாற்றுகையில் கெமரா அவர் பக்கம் திருப்பப்படாததோடு அது தொடர்பில் அவர் பல தடவை கேள்வி எழுப்பினாலும் அவர் பக்கத்திற்கு கெமரா திருப்பப்படவில்லை.

கெமரா எங்கே என அவர் கேள்வி எழுப்பவே '' உங்களுக்கு கெமரா வேண்டுமா? ஒழுங்குப் பிரச்சினை முன்வைக்க வேண்டுமா? என சபாநாயகர் கேள்வி எழுப்பினார். கெமரா சட்டப் பிரச்சினையல்ல என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் எதிரணி எம்.பிக்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபை நடுவில் திரண்டனர்.20 ஆவது சட்டம் வேண்டாமென்றும் அதனை ஒதுக்குமாறும் அவர்கள் கோரினர்

இதனையடுத்து ஆளும் தரப்பு எம்.பிக்களும் சபை நடுவில் திரண்டு 20 ற்கு ஆதரவாக கோசமெழுப்பினர். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டதோடு சஜித் தரப்பு எம்.பி சமிந்த விஜேசிறி எம்.பிக்கும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஒருவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.இருதரப்பு எம்.பிக்களும் தலையிட்டு மோதலை தடுத்தனர்.

50ற்கும் மேற்பட்ட ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சபை நடுவில் திரண்டிருந்ததோடு கலைந்து செல்லுமாறு சபாநாயகர் இருதரப்பிற்கும் தொடர்ச்சியாக கோரினாலும் அவர்கள் தொடர்ந்து சபை நடுவில் குழுமியிருந்தனர்.

இந்நிலையில் சஜித் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில் கெமரா அவரது பக்கம் திருப்பப்படாத நிலையில் அவர் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.பதாதைகளை ஏந்தி சஜித் தரப்பு எம்.பிக்கள் அவருக்கு அருகில் திரண்டிருந்த நிலையில் அவரின் பக்கம் கெமரா திருப்பப்படவில்லை. இது தொடர்பான சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்தும் அவரின் பக்கத்திற்கு கெமரா திருப்பப்படவில்லை.

இந்த நிலையில் சில சஜித் தரப்பு எம்.பிக்கள் சிலர் சபாநாயகரின் ஆசனத்திற்கு முன்பாக வந்து பதாதைகளை ஏந்தினர்.இதனால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதோடு ஆளும் தரப்பு எம்பிக்களும் அந்த இடத்திற்கு வந்து எதிரணி எம்.பிக்களை அகற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சர்ச்சைக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்ததோடு கபீர் ஹாசிம் எம்.பியின் பக்கம் கெமரா திருப்பப்பட்டு அவர் உரையை தொடர்ந்தார்.இதனையடுத்து ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆசனங்களுக்கு திரும்பினர். இதனோடு இரு தரப்பு கோஷமும் அடங்கிய​​தோடு அடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உரையாற்றினார்.

நிதிச் சட்டங்கள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றாலும் அநேகமான எம்.பிக்கள் 20 ஆவது திருத்தம் பற்றியே உரையாற்றினர். (பா)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை