ஒருநாள், 20க்கு20 சர்வதேச தொடர்களுக்காக பாகிஸ்தான் வருகிறது ஸிம்பாப்வே

ஸிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 சர்வதேச தொடர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (23) அறிவித்துள்ளது.

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் சவாலுக்கு மத்தியில் ஸிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ‘ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக்’ தொடரின் ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி 20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ளது.

தொடரில் பங்கேற்பதற்காக ஸிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு ஸிம்பாப்வே அரசின் அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தொடரை உறுதி செய்துள்ளதுடன், குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் – நவம்பர் காலப்பகுதியில் பாகிஸ்தான் – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக்’ தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடராக குறித்த ஒருநாள் தொடர் அமையவுள்ளது. ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரானது நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் குறித்த சுற்றுப்பயணம் அமையவுள்ளதன் காரணமாக போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றிய மூடிய மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் முல்தானிலும், ரி 20 தொடரின் போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டியிலும் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்காக ஸிம்பாப்வே கிரிக்கெட் சபையானது 25 பேர் கொண்ட பயிற்சி குழாத்தை அறிவித்து நேற்று முதல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குறித்த தொடரில் பங்கேற்கும் ஸிம்பாப்வே அணி ஹராரேயில் இருந்து பாகிஸ்தான் பயணிப்பதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன. அதனை தொடர்ந்து பாகிஸ்தானை வந்தடைந்ததும் அங்கு மீண்டுமொரு முறை கொரோனா பரிசோதனை நடாத்தப்படும்.

யாரேனும் ஒரு வீரர், அணி நிர்வாகிகளில் ஒருவருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுமிடத்து அவர் கட்டாயம் ஐந்து நாள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு கொரோனா பரிசோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த தொடருக்கான ஸிம்பாப்வே அணி ஒக்டோபர் 20 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளது.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை