கொவிட்-19: ஸ்பெயின் தலைநகரில் மீண்டும் பகுதி அளவு முடக்க நிலை

அமெரிக்காவில் 200,000ஐ நெருங்கும் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்ததால் ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ‘வீட்டில் தங்கி இருக்க’ உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது உலகில் வேகமாக பரவி வரும் நாடாக உள்ள இந்தியாவில் தாஜ்மஹால் மற்றும் சில பாடசாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான நாடாக இந்தியா உள்ளது.

இந்நிலையில் மெட்ரிட்டில் நேற்று ஆரம்பமான புதிய கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளன. குறைந்த வருவாய் மற்றும் அதிக மக்கள் செறிவுகொண்ட பகுதிகளே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வேலை, மருத்துவம் அல்லது குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது போன்ற அவசிய தேவைகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பூங்காக்கள் அனைத்தும் மூடப்படும். கடைகள், மதுபானக் கூடங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் 50 வீதம் வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மெட்ரிட் முழுவதும் ஆறு பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடந்த ஞாயிறன்று சில பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஸ்பெயினின் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அந்த நடவடிக்கை அவசியம் என்று ஸ்பெயின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக 31 மில்லியனை நெருங்குவதோடு 958,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

6.8 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்களுடன் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் உயிரிழப்பு 200,000ஐ நெருங்கியுள்ளது. இந்த பெருந்தொற்று அமெரிக்க பொருளாதாரத்தை அதிகம் பாதித்திருப்பதோடு மில்லியன் கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

எனினும் வரும் ஒக்டோபர் மாதத்தில் தடுப்பு மருந்து தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியபோதும் அவரது கருத்து நாட்டின் முன்னணி சுகாதார நிபுணர்களின் கருத்துக்கு முரணாக உள்ளது.

நியூஸிலந்தின் ஒக்லந்து நகரில் கொவிட்–19 நோய்ப் பரவல் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. வியாழக்கிழமை முதல் ஒக்லந்தில் நோய்ப்பரவலுக்கான எச்சரிக்கை நிலை 2ஆகக் குறைக்கப்படும்.

நாட்டின் மற்ற இடங்களில் நேற்று நள்ளிரவிலிருந்து எச்சரிக்கை நிலை 1ஆகக் குறைக்கப்பட்டதாக நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.

Tue, 09/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை