1/2 நாள் சம்பளம்; பணிப்பகிஷ்கரிப்பில் கௌரவில தோட்ட தொழிலாளர்கள்

1/2 நாள் சம்பளம்; பணிப்பகிஷ்கரிப்பில் கௌரவில தோட்ட தொழிலாளர்கள்-Gawarawila Estate Workers Strike Against Half Day Salary

சாமிமலை, ஹொரண பிளான்டேசனுக்கு உரித்தான கௌரவில தோட்டத்தில் 3 இலக்க பி பிரிவின் சுமார் 110 தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும்,தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மாத பணி புரிந்த ஒரு சில நாட்களுக்கு அரை சம்பளம் வழங்கியமையால் அதனை எதிர்த்து இப்பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவ்விடயமாக தோட்ட தலைவர் ஒருவரிடம் கேட்ட போது, தற்போது மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதால் கொழுந்து இல்லை என்றும் ஒரு சில தொழிலாளர்கள் பாரிய இன்னல்களுக்கு மத்தியில் தங்களது ஒரு நாட் சம்பளத்திற்காக தோட்ட நிர்வாகம் விதித்துள்ள 12 கிலோ கிராம் கொழுந்தினை பறித்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளமையால் 12 கிலோகிராமிற்கு குறைவான கொழுந்தினை பறித்துள்ளதால் அவர்களுக்கு நாளாந்த வேதனத்தில் பாதியே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன் இத்தோட்டத்தில் 70 பெண் தொழிலாளர்களும் 40 ஆண் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

இவ்விடயமாக தோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,தொழிலாளர்களில் சிலர் 20 கிலோ கிராம் கொழுந்து பறிக்கின்றனர் அவ்வாறு பறிப்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளமும் மேலதிக கொழுந்திற்கான வேதனமும் வழங்கப்படுகின்றது ஆனால் சில தொழிலாளர்கள் ஒரு நாட் சம்பளத்திற்கு பறிக்க வேண்டிய 12 கிலோ கிராம் கொழுந்தை விட குறைவான அளவில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு நாட் சம்பளம் வழங்கப்படவில்லை அத்துடன் தற்போது தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன ஆகையால் வேலைக்கேற்ற வேதனத்தை வழங்குவதாக குறிப்பிட்டார்.

(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் - செ.தி.பெருமாள்)

Mon, 09/14/2020 - 13:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை