ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு-Shani Abeysekara SI Nishantha Silva

- சுவிஸ் சென்ற நிஷாந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை

சாட்சியங்களை உருவாக்கி நீதிமன்றத்தை திசை திருப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (20), கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்தியபோது, இவ்விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பல நபர்களை  பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டதோடு, அவருடன் இணைந்து போலியான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர்  ரோஹண மெண்டிஸ் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, CIDயின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவையும், இவ்வழக்கின் சந்தேகநபராக பெயரிட்டு, அவரை கைது செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, சுவிஸ்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Thu, 08/20/2020 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை