தற்போதைய தேர்தல் முறை எனது தெரிவை தடுத்து விட்டது

அதிக வாக்குகளை நான் பெற்றபோதிலும்

குறைந்த வாக்கை பெற்றவர் தெரிவு- என செந்தில் கவலை

அதிக வாக்குகளை நான் பெற்றபோதிலும் தற்போதைய தேர்தல் முறையால் என்னைவிட குறைவாக விருப்பு வாக்குகளைப் பெற்ற சமிந்த விஜேசிறி (36,291 வாக்குகள்) பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளார் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்றார்.

அத்துடன், பதுளையில் தனக்கு வாக்களித்த 39,245 வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பதுளையில் எனக்கு 39,245 பேர் வாக்களித்துள்ளனர். எனினும், தற்போதுள்ள தேர்தல் முறையின்படி நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

எனினும், பதுளையில் எதிர்க்கட்சியில் என்னைவிட குறைவாக விருப்பு வாக்குகளைப் பெற்ற சமிந்த விஜேசிறி (36,291 வாக்குகள்)நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பெற்றுள்ளார்.

எனினும், எனக்கு மக்கள் தந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். முதன் முறையாக 2009ஆம் ஆண்டு பதுளையில் தேர்தலில் நின்றபோது எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு மாகாண சபையில் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தற்போது அந்த எண்ணிக்கை 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இது மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காண்பிக்கிறது.

எனவே, எனது மக்களுக்கு நான் என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பேன். பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சியில் வெற்றிபெற்ற பெரும்பான்மை உறுப்பினர்களைப் போல, எனக்கு வாக்களித்த மக்களின் குரலாய் அரசாங்கத்தில் ஒலித்து, அவர்களுக்கான அபிவிருத்தியைக் கொண்டுவர முடிவில்லை என்பதை நினைத்து மனம் வருந்துகிறேன். இதேவேளை, மொட்டு சின்னத்தில் எனக்கு வழங்கிய 40 ஆயிரம் வாக்குகளில் சிங்கள பெரும்பான்மையின உறுப்பினர்களுக்கும் இரு விருப்பு வாக்குகளை வழங்கியதால் ஆளும் கட்சியில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக மொட்டு கட்சியில் சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோருக்கும் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை வழங்கியுள்ளனர்.

சிறு தொகை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்த அவர்கள், தமிழர்களின் விருப்பு வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளனர்.இதனால் மலையக தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.

இதுவொரு ஆபத்தான சூழல். பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சூழல் நாடு முழுவதும் பரவும் பட்சத்தில், சிறுபான்மையின மக்களின் விருப்பு வாக்குகளினால் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்த விடயத்தில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள தேர்தல் முறைக்கமைய எதிர்காலத்தில் மலையக தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டுமாயின், எதிர்காலத்தில் ஒரு விருப்பு வாக்கைப் பயன்படுத்துவது மட்டுமே புத்திசாலித்தனமாக இருக்கும். இதனை சரியாக ஆராய்ந்து, விருப்பு வாக்குகளை அளித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

Mon, 08/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை