இஸ்ரேல் - ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்த வரலாற்று உடன்பாடு

‘முதுகில் குத்தும் துரோகம்’ என பலஸ்தீனர்கள் சாடல்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை ‘முதுகில் குத்தும் துரோகச் செயல்’ என்று பலஸ்தீனர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்த இந்த உடன்படிக்கையின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன நிலங்களை தன்னகப்படுத்தும் திட்டத்தை ஒத்திவைப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் முதலாவது வளைகுடா அரபு நாடு என்பதோடு எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு அடுத்து மூன்றாவது அரபு நாடாகும்.

இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே எதிர்பாராத இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இஸ்ரேலின் கூட்டு அறிக்கை ஒன்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ட்விட்டரில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்த உடன்படிக்கை ஒரு ‘பெரும் திருப்பம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் அபூதாபி முடிக்குரிய இளவரசர் ஷெய்க் முஹமது பின் செயித் அல் நஹ்யான் இடையே கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு வெளியானது.

“வரலாற்று முக்கியம் வாய்ந்த இந்த இராஜதந்திர திருப்புமுனை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தும் என்பதோடு துணிவுமிக்க இராஜதந்திரத்திற்கு சான்றாகவும் மூன்று தலைவர்களின் நோக்கு மற்றும் பிராந்தியத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய பாதைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இஸ்ரேலை ஊக்குவிப்பதாகவும் உள்ளது” என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய பிரதிநிதிகள் எதிர்வரும் வாரங்களில் சந்தித்து முதலீடு, சுற்றுலா, நேரடி விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, தொலைத்தொடர்புகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இரு தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றும் என்று தாம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் டிரம்ப் தெரிவித்தார்.

“தற்போது பனிக்கட்டி உடைந்துவிட்டது. மேலும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஐக்கிய அரபு இராச்சியத்தை பின்பற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் டிரம்பின் ட்விட் அறிவிப்பு பற்றி பதில் அளித்த நெதன்யாகு, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நெதன்யாகு, இந்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக மேற்குக் கரையை இஸ்ரேல் ஆட்புலத்துடன் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைக்க இணங்கியதாக குறிப்பிட்டபோதும், “எமது நிலத்தை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என்றும் தெரிவித்தார்.

இதுநாள்வரை வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை.

எனினும், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதால், அலுவல்பூர்வமற்ற வகையில் உடன்பாட்டை எட்டியிருக்கும் நாடுகளுக்கு இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதர் யூசுப் அல் ஓடைபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இது ராஜீயத்துக்கும் பிராந்தியத்துக்குமான வெற்றி" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல்–ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான இந்த உடன்படிக்கையை பலஸ்தீன தரப்புகள் கடுமையாக சாடியுள்ளன. இது பலஸ்தீனர்களின் அபிலாசையை பாதுகாக்காது என்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளன.

இதனை கண்டித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இது “முதுகில் குத்தும் துரோகச் செயல்” என்று குறிப்பிட்டுள்ளது.

“இது நிச்சயம் பலஸ்தீனிய அபிலாசையை பாதுகாக்காது. பதிலாக சியோனிச சிந்தனையையே பாதுகாக்கும். இது (இஸ்ரேல்) ஆக்கிரமிப்பை ஊக்குவித்து பலஸ்தீன மக்களின் உரிமைகளை தொடர்ந்து மறுப்பதோடு எமது மக்கள் மீதான குற்றச் செயல்கள் கூட தொடர்ந்து இடம்பெறும்” என்று ஹமாஸ் பேச்சாளர் ஹாசெம் கசாம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்கள் தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம் “தேசிய, மத மற்றும் மனிதாபிமான பணியை மறுத்துவிட்டது” என்று பத்தாஹ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை