Header Ads

கிறிஸ்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதல்: துப்பாக்கிதாரிக்கு இதுவரை இல்லாத ஆயுள் தண்டனையை வழங்க வாய்ப்பு

நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் 51பேரை கொன்ற நபர் மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அவர் மீதான தீர்ப்பு வழங்கும் வழக்கு விசாரணையில் நேற்று தெரியவந்தது.

ப்ரெண்டன் டரன்ட் என்ற அந்தத் தாக்குதல்தாரி பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கவும், முடியுமான வரை உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருந்துள்ளார்.

அவுஸ்திரேலியரான அவர் தம் மீதான 51கொலை குற்றச்சாட்டுகள், 40கொலை முயற்சிகள் மற்றும் ஒரு தீவிரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் 29வயதான டரன்ட் மீது பிணையில்லாத ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறான தண்டனை நியூசிலாந்தில் இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் தாக்குதலில் உயிர்தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்குதல்தாரியை எதிர்கொண்டனர்.

“51அப்பாவி மக்களின் ஆன்மாக்களை எடுப்பதற்கு நீங்கள் உங்களுக்கே அதிகாரம் கொடுத்தீர்கள். உங்களின் கண்களுக்கு முஸ்லிமாக இருப்பது மாத்திரமே அவர்கள் செய்த ஒரே குற்றம்” என்று தனது மகனை இழந்த மைசூன் சலாமா என்ற தாய் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

“நீங்கள் உணர்வுகளைக் கடந்து வரம்பு மீறி செயற்பட்டிருக்கிறீர்கள். உங்களை என்னால் மன்னிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதி கிறிஸ்சேர்ச்சில் இருக்கும் இரு பள்ளிவாசல்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி அதனை இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பச் செய்தார்.

இந்நிலையில் கிறிஸ்சேர்ச்சில் அவர் மீதான தண்டனைக்கான விசாரணைகள் நேற்றுக் காலை ஆரம்பமானது. இந்த விசாரணைகளுக்கு நான்கு நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். 

இதில் கைவிலங்கிடப்பட்டு சாம்பல் நிறக் கைதிகள் உடையுடன் மூன்று பொலிஸார் சூழவிருந்த துப்பாக்கிதாரி பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்டதோடு இருந்து நின்று தாக்குதலில் தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட உறவினர்கள் இருக்கும் பக்கமாக திரும்பிப் பார்த்தார். 

துப்பாக்கிதாரி இந்தத் திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டி இருப்பதாகவும் முடியுமான அளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்ததாகவும் அரச வழக்கறிஞர் பர்னபி ஹாவஸ் தெரிவித்தார். 

அவர் நியூசிலாந்து பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்களை சேகரித்து திட்டம், இடம் மற்றும் இலக்கு, பரபரப்பான நேரம் பற்றிய விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன் அவர் கிறிஸ்சேர்ச்சிற்கு பயணித்து தமது பிரதான இலக்கான அல் நூர் பள்ளிவாசலுக்கு மேலால் ஆளில்லா விமானம் ஒன்றை பறக்கவிட்டுள்ளார். 

இந்தத் தாக்குதலுக்கு இலக்கான அல் நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வூட் இஸ்லாமிய நிலையத்திற்கு மேலதிகமாக அஷ்பர்டோன் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்தபோதும், அவர் மூன்றாவது பள்ளிவாசலை நோக்கி செல்லும்போது பிடிபட்டுள்ளார். 

தாக்குதல் தினத்தன்று அல் நூர் பள்ளிவாசலில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் மீது அவர் சூடு நடத்தியுள்ளார் என்று நீதிமன்ற விசாணையில் கூறப்பட்டது.  

தாக்குதல்தாரி குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்தபோதும், அவருக்கு பிணையின்றி முழுமையான ஆயுள் தண்டனை ஒன்றை விதிப்பதற்கு இந்த வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி கெமரூன் மென்டருக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறான ஒரு தண்டனை நியூசிலாந்தில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டதில்லை.

Tue, 08/25/2020 - 08:54


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.