ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் வௌியேற முடிவு

- தேசிய பட்டியல் விடயத்தில் சஜித் மீது குற்றச்சாட்டு;
- இன்று வரை காலக்கெடு; இல்லையேல் தனித்து செயற்படும்

ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் உறுப்பினர் விவகாரம் காரணமாக கூட்டணிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தங்கள் தரப்பிற்கு வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் உறுப்பினர்களை வழங்காவிடின் தனித்துச் செயற்படப் போவதாக தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவத்துள்ளார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி (6 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (5 ஆசனங்கள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (3 ஆசனங்கள்) பெற்றன. இந்த நிலையில் ஏற்கெனவே உறுதியளித்தவாறு தங்களுக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குமாறு அவை கோரியுள்ளன.இந்த நிலையில் தேசிய பட்டியல் எம்.பிக்களை பகிர்வதில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்குறுதி வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனும் இது தொடர்பில் பேசி வருவதாக அறிய வருகிறது. மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன தனித்தும் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு இது முடிவின்றி இழுபறியில் முடிந்துள்ளது.

இது சம்பந்தமாக மேலதிக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது.சிறுபான்மை கட்சிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தராவிட்டால் த.மு.க ஸ்ரீல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய சிறுபான்மை கட்சிகளின் சகல எம்.பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக அமர வேண்டி வரும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பின்னடைவை சந்தித்ததோடு அந்தக் கட்சிக்கு 7 தேசியப் பட்டியில் எம்.பிக்களே கிடைத்துள்ளன.

இதில் கட்சி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் அமைச்சர்களான ஹரீன் பெர்ணாந்து, திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்கிரமரத்ன,இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோரின் பெயர்களும் உள்ளக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.

Mon, 08/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை