பயணிகள் போக்குவரத்துக்கு குறுகிய, நீண்டகால திட்டங்கள்

போக்குவரத்து அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்து

போக்குவரத்துத் துறையை அடுத்த 5வருடத்தில் கட்டியெழுப்புவதற்காக குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை செயற்படுத்துவது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முதல் நடவடிக்கையாக பயணிகள் சிறந்த மனநிலையுடன் பயணிக்கக் கூடிய வகையில் பஸ் மற்றும் ரயில்களில் வசதிகளைப் பெற்றுக்கொடுத்து போக்குவரத்துச் சேவையை கட்டியெழுப்பும் பணியை ஆரம்பியுங்களென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறந்த நிலையிலுள்ள சாதாரண பஸ் வண்டிகளை அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் இணைத்துக்கொண்டு குறைந்த கட்டணத்தில் பெருமளவு பயணிகள் நன்மைபெற வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

"மிகச் சிறிய ஆரம்பத்துடன் பெரிய மாற்றங்களை மேற்கொள்ளமுடியும்." அதற்கிணங்க பஸ் வண்டிகளை கழுவி துப்புரவு செய்து பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் நாளைய தினமே அதனை ஆரம்பியுங்கள். என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். போஸ்டர் ஒட்டுவதை நிறுத்துவதற்கான சிறியதொரு தீர்மானத்தை நாம் மேற்கொண்டு  நாட்டின் அனைத்து நகரங்களையும் தூய்மையாகப் பராமரிப்பதற்கு எம்மால் முடிந்தது. என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எல்லாத்துறைகளிலுமே மிக சிறிதாக ஆரம்பித்து பாரிய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சு, ரயில்வே மற்றும் அதனை உள்ளிட்ட இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காரில் பயணிப்பவர்களை நிறுத்தி அவர்களை பஸ்ஸில் பயணிப்பதற்கான நிலையை விரைவாக உருவாக்கி வாகன நெரிசல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் சேவையை  இலாபத்தில் இயங்கும் சேவையாக மாற்ற முடியும்.

கிராமியப் பகுதிகளில் பஸ் போக்குவரத்து தொடர்பில் அரச மற்றும் தனியார் துறையினர் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ரயில், பஸ் இணைந்த சேவை  மற்றும் பஸ் போக்குவரத்து தொடர்பான நேர அட்டவணையை செயற்படுத்துங்கள். போக்குவரத்துத்துறையை கட்டியெழுப்புதற்காக அடிப்படையில் என்ன தேவையுள்ளது என்பதை இனம்கண்டு அதனை நடைமுறைப்படுத்துங்கள்.

அடுத்த 5 வருடத்தில் போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புவதற்காக குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை செயற்படுத்துவது அவசியம். குறித்த இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்  

Wed, 08/19/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை