வன்முறைகள் இடம்பெற்றால் அப்பகுதியில் மீள் வாக்​கெடுப்பு

பொலிஸாருக்கு சுடும் அதிகாரம்; இராணுவப் பிரசன்னம் இல்லை

80 வீத வாக்களிப்பு இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய எதிர்பார்ப்பு

கொரோனா அச்சமின்றி வாக்களிக்க வருமாறு அழைப்பு

வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்பமோ வன்முறையோ இடம்பெறும் பட்சத்தில் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அங்கு தேர்தல் நடத்தப்படும். கள்ள வாக்குகள் அளிப்பதைத் தடுக்க பொலிஸாருக்கு முழு அதிகாரமும்  வழங்கப்பட்டுள்ளதோடு துப்பாக்கி பிரயோகத்துக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.

கோவிட் 19 காரணமாக தேர்தலுக்கு மறுநாள் வாக்குகள் எண்ணப்படுவதால் வாக்குப் பெட்டிகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், எக்காரணம் கொண்டும் மோசடியோ முறைகோடோ இடைபெற வாய்ப்பு கிடையாதென்றும் அவ் குறிப்பிட்டார்.

தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

கோவிட் 19 தொற்றுப் பிரச்சினைக்கும் காலநிலை சீர்கேட்டுக்கும் மத்தியில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களென்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், 09 மணி நேரத்தில் ஒரு கோடி 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளுக்கு வெளியில் வந்தாலும் வாக்களிப்பினூடாக கொரோனா தொற்றுக்கு எந்த வாய்ப்புமில்லையெனவும் குறிப்பிட்டார்.

தேர்தலின் இறுதி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம்,மதுபானம் மற்றும் உபசரிப்புகள் வழங்க வேட்பாளர்கள் முயல்வதாக குறிப்பிட்ட அவர்,இலஞ்சம் வழங்கி பிடிபடும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவரது எம்.பி பதவி இரத்தாகலாமென்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், பொலிஸாரின் பாதுகாப்புக்கே அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குழப்பம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் சாய்ந்தமருது, அக்கறைப்பற்று, ஓட்டமாவடி, ஏறாவூர், திருமலையின் சில பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2020 தேர்தலுக்கான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றியும் விளக்கமளித்த அவர், மேலும் கூறியதாவது,

இம்முறை தேர்தலில் 1,62, 63, 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 12,774 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதோடு வாக்குப் பெட்டிகள் இன்று 71 இடங்களில் வைத்து கையளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு தலா இரு பொலிஸார் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.தொற்று நீக்கி செயற்பாடுகள் நேற்றும் நடைபெற்றன. அதிகாரிகள் இன்று முதல் வருகை தருவர். வாக்களித்த பின்னர் தாம் தொழில்புரியும் இடங்களுக்கோ வீடுகளுக்கோ தான் செல்ல வேண்டும். வீதிகளில் நடமாடக் கூடாது. ஒரே நாளில் ஒரு ​கோடி 20 இலட்சத்திற்கு அதிகமானவர்கள் வீதிக்கு வந்தாலும் கொரோனா தொற்ற வாய்ப்பில்லை. அதனை சுகாதாரத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.தேர்தலினூடாக கொரோனா தொற்று இடம்பெறாதிருக்க சகல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களை வாக்காளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம். முகக் கவசத்தை போன்றே அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து வருவது கட்டாயமாகும்.

முடிந்தால் பேனை ஒன்றையும் எடுத்து வருவது உகந்தது. முகக்கவசத்தை அகற்றி முகத்தை காண்பித்த பின்னரே வாக்களிப்பிற்கு அனுமதிக்கப்படும். அதிகாரிகளின் ஸ்பரிசமின்றி மையிடுதல்,வாக்குச் சீட்டு வழங்குதல் முதல் வாக்குகளை அளித்தல் வரையான சகல நிகழ்வுகளும் நடைபெறும்.

கட்சிக்கோ சுயேச்சை குழுவிற்கோ முதலில் அளித்த பின்னரே விரும்பிய கட்சி அபேட்சகருக்கோ சுயேச்சைக்குழு உறுப்பினருக்கோ விருப்பு வாக்கை அளிக்க வேண்டும்.

வாக்களிப்பு நிலையத்திற்கு எவருக்கும் கொரோனா தொற்றை கொண்டுவரவும் முடியாது இங்கிருந்து எடுத்துச் செல்லவும் முடியாது. கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பில் வினவப்படுகிறது. 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ பிரசன்னம்

இராணுவம் சிலபகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவில்லை. அவர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.இராணுவச் சாவடிகளை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாலை 05 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்தாலும் மறுநாள் தான் வாக்குகள் எண்ணப்படும். மறுநாள் வரை வாக்குப் பெட்டிகளை பாதுகாக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகள் யாவும் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். அவற்றில் கட்சிகள்,சுயேச்சை குழுக்கள் சார்பில் ஸ்ரிக்கர் ஒட்ட முடியும். வாக்குப் பெட்டிகள் மற்றொரு பெரிய பெட்டியில் வைத்து மீண்டும் சீல் வைக்கப்படும்.அவற்றை மறுநாள் வரை கட்சிப் பிரதிநிதிகளால் அருகிலிருந்து கண்காணிக்க முடியும். இங்கு பெட்டிகள் மாற்றப்படவோ பெட்டிகளுக்கும் வாக்குகள் இடப்படவோ வாய்ப்பு கிடையாது.சிலர் சீ.சீ ரீவி கமராக்கள் போடவேண்டும் என்கின்றனர். வடமேல் மாகாண தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ,யாழ். அபிவிருத்தி சபை தேர்தல் என்பவற்றில் மாத்திரமே மோசடி நடந்துள்ளது.கடந்த 40 வருடத்தில் தேர்தல் மோசடியோ விருப்பு வாக்கு முறைகேடோ நடந்தது கிடையாது.கள்ள வாக்கு இட வந்தால் சுடுவதற்கு பொலிஸாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.வாக்குச் சீட்டுகளிலும் இரகசிய குறியீடுகள் இடப்படும். இந்த தேர்தலில் கோவிட் 19 தோல்வியடையும் ஜனநாயகம் வெற்றியடையும் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை