இலங்கைக்கு எந்தவொரு நாடும் எதிரியாக இல்லை

வெளிவிவகார அமைச்சர் தினேஷ்

சர்வதேசத்தின் எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிரியில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, எனினும் நாட்டின் இறையாண்மைக்கும் அரசியலமைப்பிற்கும் யுத்தவெற்றி வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு கடப்பாட்டினதும் பங்காளியாக இலங்கை இருக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை,  ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடு என்ற கடப்பாட்டைக் கொண்டிருக்கும் இலங்கை, கொவிட் -19 வைரஸ் பரவல் உள்ளடங்கலாக தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்வதற்கு அதனுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, - பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தன  நேற்று (17)  வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

தற்போது தேசிய ரீதியில் நாம் மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கின்றோம். உறுதியானதும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலானதுமான நாட்டின் பயணமொன்றுக்காக மக்கள் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குத் தமது ஆணையை வழங்கினார்கள். அதன் பின்னர் அண்மையில் நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத்தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான ஆதரவை மக்கள் காண்பித்திருக்கின்றார்கள். தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் உலகின் எந்தவொரு நாட்டிலும் அரசாங்கம் இத்தகைய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டதில்லை. அல்லது அவ்வாறு நிகழ்ந்த சம்பவங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.   அவ்வாறிருக்க அத்தகைய பெரும்பான்மை ஆணையொன்றையே மக்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பானதும் ஸ்திரமானதுமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு முதலில் பலமான அரசாங்கமும் வலுவான மக்கள் ஆணையும் மிகவும் அவசியமாகும். சர்வதேசத்தின் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வதற்கும் அது இன்றியமையாததாகும். 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 08/18/2020 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை