அரசு பேச்சு நடத்த அழைத்தால் அவசியம் பங்கேற்க வேண்டும்

சமூகம் பற்றி சிந்தித்து முடிவு – ஹரீஸ் எம்.பி

தேசிய பட்டியல் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையில் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட எழுத்து மூல ஒப்பந்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீறியுள்ளார். இனிவரும் காலங்களில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுப்போமென ஸ்ரீல.மு.கா.பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சமுதாயத்தை பற்றி சிந்தித்து நாங்கள் முடிவெடுக்க வேண்டும். சமூகம் சார் விடயங்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் கட்டாயம் செல்ல வேண்டும். தமிழ் கூட்டமைப்பின் கதையை கேட்டு கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்கு இனியும் அனுமதிக்க முடியாது.

கடந்த கொரோனா காலத்தில் நாங்கள் அந்த தவறை செய்தோம். தனிநபர்களை திருப்திப்படுத்தும் எவ்வித நடவடிக்கைக்கும் நான் அனுமதி வழங்கப்போவதில்லை என்பதை கிழக்கில் பிறந்த ஒரு மக்கள் பிரதிநிதியாக தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறி வைக்கிறேன் என்றார்.  

கல்முனை தொகுதியை வெல்ல வேண்டும் என்பதனாலேயே நான் மட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் எங்களின் தலைமையினால் களமிறக்கப்பட்டேன். இருந்தாலும் என்னை தோற்கடிக்க எங்களின் கட்சியை சேர்ந்த ஏ.எம். ஜெமீல் பகிரங்கமாகவே வேலை செய்தார் என எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி தெரிவித்தார்.  

மாவடிப்பள்ளியில் (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,  

சாய்ந்தமருதில் வசிக்கின்ற எங்கள் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளராக இருக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் எங்களின் தலைமையான ரவூப் ஹக்கீமின் ஆலோசனையை புறந்தள்ளி கல்முனை தொகுதி வேட்பாளராக களமிறங்கிய என்னை தோற்கடிக்க பகிரங்கமாக தேர்தலில் வேலைசெய்தார். அது கவலையான விடயமாக இருந்தாலும் அப்பிரதேசத்திலிருந்து எங்களின் தொலைபேசி சின்னத்திற்கு அளித்த வாக்குகளில் 90 வீதத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை அந்த மக்கள் வழங்கியிருந்தனர் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  

சகோதரர் ஜெமீல் எங்களின் கட்சியை விட்டு வெளியேறி சென்று வேறு கட்சியில் இணைந்து அதிலிருந்து வெளியாகி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைய பிரதான வகிபாகம் வகித்தவன் நான். இருந்தாலும் தலைமைத்துவ கட்டுப்பாட்டையும் கல்முனை தொகுதியையும் புறந்தள்ளி அவர் செய்த இந்த காரியம் மிக வேதனையான ஒன்றாகும் என்றார்.  

இவ்ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை முதல்வர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மு.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

ஒலுவில் விசேட, பெரியநீலாவணை விசேட நிருபர்கள்

Sun, 08/16/2020 - 06:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை