இந்தியா-அவுஸ்திரேலியா ‘பொக்சிங் டே’ டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்றம்?

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ‘பொக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படுகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ஒரு டெஸ்ட் டிசம்பர் மாதம் 26-ம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கப்படும் இந்த டெஸ்டுக்கு ‘பொக்சிங் டே’ எனப் பெயர். 26-ம் திகதி மெல்போர்ன் மைதானம் முழுவதும் இரசிகர்களால் நிரம்பி காணப்படும். தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விக்டோரியா மாநிலத்தில்தான் மெல்போர்ன் மைதானம் அமைந்துள்ளது.

தற்போது அங்கு 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற நிலையில் போட்டியை நடத்தி சுமார் 30 கோடி அவுஸ்திரேலிய டொலரை இழக்க அவுஸ்திரேலியா விரும்பவில்லை.

இதனால் அடிலெய்டில் நடத்த விரும்புகிறது. தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டில் 457 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 445 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் போட்டியை அடிலெய்டுக்கு மாற்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை விரும்புகிறது. இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க இருக்கிறது.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை