சுபவேளையில் தனது கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர் மஹிந்த

மத அனுஷ்டானங்கள், எளிமையான வைபவத்துடன் பொறுப்பேற்பு

 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரிமாளிகையில் சுபவேளையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, களனி ரஜமஹா விகாரை முன்றலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் நான்காவது தடவையாகவும் கடந்த 09ஆம் திகதி பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளால் மஹிந்த ராஜபக்‌ஷ அமோக வெற்றியீட்டினார்.

இந்நிலையில் நேற்றுக் காலை அலரிமாளிகைக்கு வருகை தந்த புதிய பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமரின் வருகையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் இம்முறை தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்,மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சம்பிரதாய நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்தையடுத்து பௌத்த தேரர்களின் "செத் பிரித்' பாராயனத்துடன் ஆரம்பமாகியதுடன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மம்பில உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 08/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை