இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் புதிய சாதனை

அயர்லாந்து அணியுடன் கடந்த (01) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து பயணித்துள்ள அயர்லாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆதில் ரஷீட்டின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஜொனி பெயர்ஸ்டோவின் அதிரடி துடுப்பாட்டம் மூலம் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் அயர்லாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆதில் ரஷீட், அயர்லாந்து வீரர்களான ஹரி டெக்டர், கெவின் ஓ பிரைன் மற்றும் லேர்கன் டுக்கர் ஆயோரின் விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

ஆதில் ரஷீட் இவ்வாறு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அத்துடன் 150 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி சார்பாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரராகவும் இடம்பிடித்தார்.

2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற 32 வயதுடைய ஆதில் ரஷீட் 102 போட்டிகளில் 96 இன்னிங்ஸ்களில் விளையாடி இவ்வாறு 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக க்ரேம் ஸ்வான் காணப்பட்டார். அவர் 79 போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் விக்கெட்காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ஜொனி பெயர்ஸ்டோ 41 பந்துகளை முகங்கொடுத்து 82 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இப்போட்டியில் ஜொனி பெயர்ஸ்டோ 75 ஓட்டங்களை கடந்த வேளையில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 3,000 ஓட்டங்களை பூர்த்தி செய்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற ஜொனி பெயர்ஸ்டோ 79 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 72 இன்னிங்ஸ்களில் 3,007 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதன்மூலம், ஜொனி பெயர்ஸ்டோ, இங்கிலாந்து அணி சார்பாக அதிவேக 3,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை