துப்பாக்கிதாரிக்கு பிணையில்லா முழு ஆயுள் தண்டனை விதிப்பு

கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதல்:

கிறிஸ்ட்சேர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் 51 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்று பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை விதித்துள்ளது. நியூசிலாந்து வரலாற்றில் கைதி ஒருவருக்கு வழங்கப்படும் மிகக் கடுமையான தண்டனையாக இது உள்ளது.

51 பேரை கொன்றது, மேலும் 40 பேரை கொலைசெய்ய முயன்றது மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பிரென்டன் டரன்ட் ஒப்புக்கொண்டார்.

அவரது செயற்பாட்டை ‘மனிதாபிமானமற்றது” என்று குறிப்பிட்ட நீதிபதி அவருக்கு “மன்னிப்புக் காட்ட முடியாது” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது உலகெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

டரன்ட் மீதான தண்டனை நியூசிலாந்து வரலாற்றில் பயங்கரவாத குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகவும் இருந்தது.

“இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டு அது தண்டனையின் தேவையை பூர்த்தி செய்யாத அளவுக்கு உங்களது குற்றங்கள் மிகக் கொடியது” என்று கிறிஸ்சேர்ச் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கெமரூன் மன்டர் தெரிவித்தார்.

பிணை வழங்கப்படாத தண்டனை மூலம் குற்றவாளி தமது மொத்த தண்டனையில் ஒரு பகுதியை பூர்த்தி செய்த பின் சிறையை விட்டு வெளியேற கிடைக்கும் சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது.

இவ்வாறான பிணையற்ற ஆயுள் தண்டனையை மிக மோசமான கொலையாளி மாத்திரமே அனுபவிக்க முடியும் என்று நீதிபதி மன்டர் தெரிவித்தார்.

நியூசிலாந்து நீதிக் கட்டமைப்பில் மரண தண்டனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டர், “புகழ் இல்லை, மேடை இல்லை. அவரை பற்றி மீண்டும் கேட்பதற்கு, பார்ப்பதற்கு, நினைப்பதற்கு எமக்கு எந்த காரணமும் இல்லை.

அந்தப் பயங்கரவாதியின் பெயரை உச்சரிப்பது அல்லது கேட்பது இன்று தான் கடைசியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இந்தக் கொலைச் சம்பவத்தை அடுத்து நியூசிலாந்தில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தண்டனைக்கான விசாரணையின்போது தாக்குதலில் தப்பியவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்றத்தில் இருந்தனர். நான்கு நாள் நீடித்த இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேர் வாக்குமூலம் அளித்தனர்.

நான்காம் நாளான நேற்று நீதிமன்றத்தில் குர்ஆன் வாசகங்கள் ஓதப்பட்டன. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் படங்களும் அங்கு காட்டப்பட்டன. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் எதுவும் பேச வேண்டாம் என்று டரன்ட் முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை