பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேசியப் பட்டியில் ஊடாக பாராளுமன்றம் செல்லவுள்ளவர்களின் பெயர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68,53,693 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. அதன் பிரகாரம் கட்சிக்கு 17 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

17 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஊடாக பாராளுமன்றம் செல்லவுள்ளவர்களின் பெயர் பட்டியலை நேற்றுமுன்தினம் அக்கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.    இப் பெயர் பட்டியலில் தமிழர் ஒருவருக்கும் மூன்று முஸ்லிம்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.    ஏனைய 14 பேரின் பெயர் விபரம்,  

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் மத்திய வங்கி தலைவர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மஞ்சுள திஸாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித்த ஹேரத், கெவிந்து குமாரதுங்க, பேராசிரியர் திஸ்ஸ விதாரன, பொறியியலாளர் யாமினி குணவர்தன, டிரான் அலஸ், வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல, ஜயந்த கெடகொட ஆகியோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.    ஏனைய கட்சிகள் இன்னமும் தமது கட்சியின் ஊடாக செல்லும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  

பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ள அரசியல் கட்சிகள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியலை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

முழுமையான பெயர் பட்டியல் பெறப்பட்ட பின்னர் பாராளுமன்றம் செல்லும் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Sun, 08/09/2020 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை