Header Ads

கட்சி பேதங்களை கடந்து அனைவரது ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு

விரைவில் உருவாக்கப்படுமென்கிறார் பிரதமர்

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு கட்சி பேதங்களைக் கடந்து அனைவரதும் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். 

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை புறந்தள்ளி மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றத்தில் ஒன்றிணைவது அவசியமென்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புதிய எம்.பிக்களுக்கான விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதனைப் புறக்கணிப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமொன்று கிடையாது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், எமக்கு அரசியல் பழிவாங்களில் ஈடுபட தற்போது நேரமில்லை. அதற்காக மக்கள் எமக்கு ஆணை வழங்கவுமில்லை என்றும் தெரிவித்தார். 

 ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கான செயலமர்வு பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றதுடன் செயலமர்வில் உரை நிகழ்த்தியபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,  

'மக்கள் நினைப்பது அமைச்சரொருவரை உருவாக்குவதற்கல்ல. தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். எத்தகைய அதிகாரம் கொண்ட அமைச்சுப் பதவி இருப்பினும் தமது பொறுப்பை முறையாக செயற்படுத்தாவிடின் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதனால் பாராளுமன்றத்தில் சிறந்த உறுப்பினராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் செயற்படுவதே மிக அவசியமானது.  

 கடந்த தேர்தல் நாட்டின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பொதுத் தேர்தல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது விகிதாசார தேர்தல் முறையின் கீழ் 2/3பெரும்பான்மை கிடைத்ததால் மட்டுமல்ல. 1946இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாது போனதும் ஆச்சரியமூட்டும் விடயமாகும். அவை வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களாகும். 

இந்த தேர்தலின் மூலம் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல செய்தியை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.  

 இந்தத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பண பலத்தை கொண்டு பாரியளவிலான பிரசாரங்களை மேற்கொள்ள முடியவில்லை. போஸ்டர்கள் இல்லை. கட்அவுட்கள் இல்லை. நிகழ்வுகள் இல்லை. ஆர்ப்பாட்டங்கள் இல்லை. பஸ்களில் கூட்டங்களை அழைத்துவரும் செயற்பாடும் இடம்பெறவில்லை. அனைத்து பிரதேசங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட்டோம். அதனால் 71வீதமான மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர். இது எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய செய்தியாகும். இது மக்களுக்கு நாட்டின் மீதுள்ள அன்பு போன்றே சரியான வேலைத்திட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அவர்கள் வழங்கும் கௌரவத்தை எடுத்துக்காட்டுகிறது.  இந்த முறை தேர்தலில் பிரதமரானாலும் அல்லது கட்சித் தலைவரானாலும் நாட்டிற்காக வேலை செய்யாவிடின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சிறந்த அரசியல் தலைமுறையிலிருந்து வந்திருந்தாலும் கூட வேலை செய்ய முடியாவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மக்கள் தொடர்ந்தும் இவ்வாறே செயல்படுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே, இளமையாக இருப்பதனாலும் பதவியில் இருப்பதனாலும் ஒரு தலைமுறையிலிருந்து தோற்றம் பெற்றவர்களானாலும் அல்லது படித்தவர்களாக இருப்பதனாலும் பயனில்லை. மக்கள் எமக்கு வழங்கியுள்ள பணியை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் மக்கள் நிராகரித்து விடுவர்.  

 இளம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் அமைச்சர்களாகிவிட எதிர்பார்க்கின்றனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை பாராளுமன்றத்தில் சந்தித்து நாட்டிற்காக பணியாற்ற தங்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியை வழங்குமாறு கோருகின்றனர். 

அமைச்சுப் பதவியின்றி அரசாங்கத்தில் இருக்க முடியாதவர்களுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சியில் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமைச்சுப் பதவிக்காக அரசியலில் ஈடுபடுபவருக்கு உறுப்பினராக பொறுப்பை நிறைவேற்றவும் முடியாது. அவ்வாறு அமைச்சுப் பதவியில் தங்கியிருப்பவர்கள் தான் எதிர்க்கட்சிக்கு சென்றவுடன் கட்சி தாவுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு அரசியலில் சிறந்த எதிர்காலம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் ஊடாக வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் சரி செய்யப்படும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நாம் அனைத்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் அபிலாஷைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். 

 1977முதல் இப்போது வரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டை ஆட்சிசெய்த ஒரு அரசியலமைப்பு உள்ளது. அது அவ்வப்போது திருத்தப்பட வேண்டும்.  

அரசியலமைப்பு என்பது ஒரு தரப்பிற்கு சொந்தமான உரிமை அல்ல. அது நம் அனைவரிலும் தாக்கம் செலுத்தும் அடிப்படை சட்டமாகும். அதில் உள்ள ஒவ்வொரு காற்புள்ளியும், முற்றுப்புள்ளியும் எமது வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றது. இதனால், மக்கள் கோருகின்ற அரசியலமைப்பை மாற்றும் பணியில் அரசியல், கட்சி பேதங்களை காட்ட வேண்டாம். இது எங்கள் பொறுப்பு. தற்போதுள்ள அரசியலமைப்பின் அனைத்து சாதகமான அம்சங்களையும் நாம் உள்வாங்க வேண்டும். என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Wed, 08/26/2020 - 08:39


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.