அமெரிக்க குடியுரிமையை கைவிடுவோர் அதிகரிப்பு

அமெரிக்கர்கள் இதுவரை இல்லாத அளவில் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே வெளிநாடுகளில் வசிப்பவர்களாவர்.

இந்த வருடத்தின் முதல் 6மாதங்களில் சுமார் 5,800அமெரிக்கர்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் அவ்வாறு கைவிட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,072மட்டுமே.

நியூயோர்க் நகரைச் சேர்ந்த பப்ரிட்ஜ் அக்கௌண்ட் எனும் வெளிநாட்டினருக்கான வரி ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

அந்நிறுவனம் அமெரிக்க அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் பொது விபரங்களை ஆராய்ந்து அதனைத் தெரிவித்ததாக சி.என்.என். செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குழப்பமான முடிவுகள், அமெரிக்காவின் நிச்சயமற்ற அரசியல் சூழல், அதன் வெளியுறவுக் கொள்கை, கொவிட்–19  நோய்ப்பரவலை டிரம்ப் கையாளும் விதம் ஆகியவற்றில் உருவான மனக்குறை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியது.

மேலும், மிதமிஞ்சிய வருமான வரியும், அமெரிக்கர்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிடுவதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் வசித்தாலும் அமெரிக்கர்கள், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு வங்கிக் கணக்கு விபரங்கள், முதலீடுகள், ஓய்வுக்காலச் சேமிப்பு முதலிய விபரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.

அதை விரும்பாத சிலர் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவதற்கும்கூட சுமார் 2,350டொலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

அமெரிக்கக் குடிமகனாய் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளைக் காட்டிலும் செலவுகளே அதிகம் என்பது சிலரின் கருத்து.

Tue, 08/11/2020 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை