தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்களாக செயற்படுவதற்கு இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் இளம் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி கடமைகளை ஆரம்பித்தார்.

இலங்கையில் உள்ள விளையாட்டு சங்க அதிகாரிகளை கடந்த இரண்டு தினங்களாக சந்தித்து வருகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்களை நேற்று (20) நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தீர்மானங்களை எடுப்பதற்கும், விளையாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்குகின்ற இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினர்களாக செயற்படுவதற்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய இருவருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டுத்துறை சட்டத்தின் கீழ் (பிரிவு 25 பிரிவு 4) செயற்படுகின்ற தேசிய விளையாட்டுப் பேரவைக்காக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய இருவரும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

விளையாட்டுக்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்துவருகின்ற தொழில் வல்லுநர்கள் உள்ளடக்கிய பலரை இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டுத்துறை சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

இந்த சட்டமானது நான்கு தடவைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு புதியதொரு விளையாட்டு சட்டத்தை கொண்டுவர வேண்டியதே நாம் முதலில் செய்ய வேண்டிய விடயம் என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தை திருத்தாமல் இடையிடையே திருத்தங்களை மேற்கொள்வதால் பலனில்லை. பிரதமரினதும் ஜனாதிபதியினதும் ஆலோசனைகளுக்கு அமைவாக சட்டத்தரணிகள் சங்கம், சட்ட மா அதிபர் திணைக்களத்துடனும் நீதி அமைச்சருடனும் கலந்தாலோசித்து நாம் விளையாட்டுத்துறை சட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும்.

அந்த விடயங்களின் பிரகாரமே இந்த விளையாட்டுத்துறை நீடிக்கும் விதம் தீர்மானிக்கப்படும். சகல விளையாட்டு சங்கங்களும் அரசாங்கத்தில் தங்கியிருக்கும் விதத்திலேயே சட்டத்தில் உள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை எடுத்துக்கொண்டால், விளையாட்டுத்துறை பொருளாதாரம் மூலம் நூற்றுக்கு இரண்டு, மூன்று வீத வருமானம் கிடைக்கின்றது. நாம் பழைய சட்ட திட்டங்களுடன் இருப்பதன் காரணமாகவே எம்மால் அந்த நிலைக்கு செல்ல முடியாதுள்ளது” என தெரிவித்தார்.

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை