சகோதர சகோதரிகள் நால்வர் கராத்தே கலையில் பிரகாசிப்பு

திறமைக்கு வறுமை ஒரு காரணமல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக மத்திய மாகாணத்திலுள்ள கண்டி உடிஸ்பத்து என்ற இடத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகள் நால்வர் சொட்கோன்  கராத்தே தற்காப்பு  கலையில் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். இதனை அறிந்த மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மேற்படி மாணவர்களது வீடு தேடிச் சென்று உதவிய ஒரு சந்தர்ப்பம் அண்மையில் நிகழ்ந்தது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-, தெல்தெனிய கல்வி வலயத்தில் உடிஸ்பத்துவ அமுபிட்டிய தேசிய பாடசாலை மற்றும் உடிஸ்பத்துவ ஆரம்பப் பாடசாலை என்பவற்றில் கல்வி பயிலும் ஒரே குடும்ப மாணவ மாணவிகள் சொட்கோன்  கராத்தே தற்காப்பு தாக்குதல் கலையில் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிக்காட்டியுள்ளதுடன் சர்வதேச ரீதியிலும் பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்கள் வென்றுள்ள பதக்கங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களை வீடு தேடிச்சென்று மத்திய மாகாண ஆளுநர் உதவினார்.

அவர்கள் உடிஸ்பத்துவ அமுபிட்டிய தேசிய பாடசாலை மற்றும் அமுபிட்டிய ஆரம்பப் பாடசாலை என்பவற்றைச்  சேர்ந்த சந்துன் செவ்மினி தர்மரத்ன (வயது 16) திவ்மி தக்ஸ்மிலா தர்மரத்ன (வயது 12), சேத்தன விதுசான் தர்மரத்ன (வயது 10) அவ்சத விதுசான் தர்மரத்ன (வயது 06) ஆகிய நால்வராகும்.

உடிஸ்பத்துவ எட்டம்கஹவத்த என்ற இடத்தில் உள்ள அவர்களது வீடு தேடிச்சென்ற ஆளுநர் அவர்களது எதிர்கால கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான விடயங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர்களது விளையாட்டுப் பயிற்சியாளர் எஸ். சூரியபவன் மத்திய மாகாண விளையாட்டுத் துறை உதவி கல்விப் பணிப்பாளர்  அத்துல ஜயவர்தன ஆகியோரும் உடன் சமுகமளித்திருந்தனர். இவர்கள் நால்வரும் உடிஸ்பத்துவ எட்டம்கஹவத்த என்ற இடத்தில் வசிக்கும் பிரியந்த சஞ்ஜீவ தர்மரத்ன மற்றும் சாந்தனி தர்மரத்ன தம்பதிகளின் பிள்ளைகளாவர்.

அக்குறணை குறூப் நிருபர்

Wed, 08/05/2020 - 14:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை