லெபனான் வெடிப்புச் சம்பவம்: எச்சரிக்கையை அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது மக்கள் கோபம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சி தற்போது கோபமாக மாறியுள்ளது. இந்த வெடிப்புடன் தொடர்புடைய அபாயகரமான இரசாயன பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் அதிகாரிகள் அவைகளை பொருட்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.  

ஆயிரக்கணக்கான தொன் அமோனிய நைத்திரேற்று வைக்கப்பட்டிருப்பது அபாயகரமானது என்பதை அதிகாரிகள் தெரிந்திருந்தது பற்றி மின்னஞ்சல்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஊட்பட ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.  

லெபனான் நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு இன்றி களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்து இந்த இரசாயனத்தை ‘மிதக்கும் குண்டு’ என்று அழைத்து வந்துள்ளனர். எனினும் அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தத் தவறியுள்ளனர்.  

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் என்று நாட்டின் அரசியல்வாதிகள் மீது அதிருப்தியில் உள்ள லெபனான் மக்கள் இந்த வெடிப்புச் சம்பவத்தில் அரசின் அலட்சியப் போக்கு பற்றி கோபத்தை வெளியிட்டு வருகின்றனர்.  

லெபனானின் நாணய மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டு, விலைவாசி உயர்வு மற்றும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த வெடிப்புச் சம்பவம் அரசின் இயலாமையை காட்டுவதாக உள்ளது என்று குறைகூறுகின்றனர்.  

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தினால் தலைநகரின் துறைமுகத்தின் பெரும் பகுதி அழிவடைந்துள்ளது. இதனால் 137 பேர் உயிரிழந்து 5,000 பேர் வரை காயமடைந்திருப்பதோடு பல்லாயிரம் பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர்.  

வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் 400 அடி அகலம் கொண்ட பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நகரில் இருக்கின்ற அடுக்குமாடிக் கட்டடங்கள் பேரும் சேதம் அடைந்து காலியாகக் காணப்படுகின்றன.  

நகரை சுத்தம் செய்யும் நடவடிக்கையை தன்னார்வலர்கள் நேற்று ஆரம்பித்தனர். நகரெங்கும் இருந்து மக்கள் வீதிகளை கூட்டி, குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதோடு குடிமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். குடியிருப்பாளர்களும் தமது வீடுகளில் இருக்கும் இடுபாடுகளை அகற்றி வருகின்றனர்.  

நகரில் இருக்கும் எல்லா குடியிருப்பு மற்றும் வர்த்தகங்களும் இந்த வெடிப்பினால் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை சந்தித்திருப்பதாக லெபனான் பொருளாதாரத் துறை அமைச்சர் ரவுல் நஹ்மி தெரிவித்துள்ளார். தலைநகரில் இருக்கும் 90 வீதமான ஹோட்டல்கள் சேதமடைந்திருப்பதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெடிப்பு இடம்பெற்று இரண்டு நாட்கள் ஆகியும் தொடர்ந்து பலர் காணாமல்போன நிலையில் இருப்பதோடு 300,000 பேர் வரை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.    

Fri, 08/07/2020 - 10:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை