ஊடகவியலாளர்களுக்கும் இனி தபால்மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்

ஏற்பாடு செய்வதாக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு தபால்மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் உரிய கோரிக்கைகள் விடுத்தால் அதனை அமைச்சரவையில் கலந்துரையாடி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுமென ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள தபால் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன் நேற்று தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தபால் சேவையில்லாவிட்டால் எமது நாட்டில் தேர்தலொன்றை நடத்த முடியாது. அந்தளவு வினைத்திறன் மிக்க வேவையை தபால் திணைக்களம் வழங்குகிறது. இதற்கு தலைமை வழங்கக் கூடிய சிறந்த அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மிகவும் இக்கட்டான சூழல்களை கடந்தே இந்த நிலையை அடைந்துள்ளார். மிகவும் பொறுப்புவாய்ந்த சேவையாகவுள்ள தபால் சேவையை அவர் வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளை நான் வழங்குவேன் என்றார்.

ஊடகவியலாளர்ளுக்கு தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான வாய்புகள் கிடைக்கப்பெறாமல் போவதால் தபால்மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமா? என இங்கு ஊடகவியலாளர்களால் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இது தொடர்பிலான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. என்றாலும் ஊடகவியலாளர்கள் எம்மிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தால் அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி தேர்தல்கள் ஆணைக்குழுக்கு நாம் தெரியப்படுத்துவோம். அதேபோன்று ஊடகவியலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இறுதி தீர்மானத்தை எடுக்கக் கூடிய அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை