அரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி செயற்படுவது நல்லது

மு.கா. ஹாபிஸ் நஸீர் எம்.பி

சாணக்கியமாக காய் நகர்த்தி அரசாங்கத்துடன் இணக்கப்பாடான அரசியலை எவ்வாறு செய்ய முடியுமென்பதில் மிகவும் தெளிவாக உள்ளோமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  

முஸ்லிம் காங்கிரஸின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கல்குடாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ள நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ள இவ் வேளையிலே எதிர்க்கட்சிகளின் குரல்களை இல்லாமல் செய்து இந்த அரசாங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்நிலையில் நாங்கள் சிறுபான்மை சமூகத்தினுடைய வெவ்வேறு பிரதிநிதித்துவத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றையெல்லாம் முறியடித்து சாணக்கியமாக காய் நகர்த்தி இந்த அரசாங்கத்துடன் இணக்கப்பாடான அரசியலை எவ்வாறு செய்ய முடியுமென்பதில் மிகவும் தெளிவாக உள்ளோமென ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏனெனில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளார்கள்.  

எனவே இவர்களுடன் இணக்கப்பாடான அரசியலை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றியதாகவே தான் எங்களுடைய அரசியல் நகர்வுகள் இருக்கும். முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும், அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் நாங்கள் சாணக்கியமான காய் நகர்த்தல்களை நிச்சயமாக செய்வோம்.  

அவ்வாறு செய்து முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற எந்தவொரு பிரேரணைக்கும் நாங்கள் ஒருபோதும் கை உயர்த்தப்போவதுமில்லை. ஆதரவு வழங்கப்போவதுமில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற முதலாவது குரலாக எனது குரல் இருக்கும் என்றார்.  

இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடியோடு அழித்தொழிக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி அடியோடு இல்லாமல் செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களை கையில் வைத்துக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

Sun, 08/16/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை