மீண்டும் தலைதூக்கும் வைரஸ்: பிரான்ஸ், பிரிட்டனில் நெருக்கடி

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளன.

தலைநகர் பாரிஸில் முகக் கவசம் அணிவது நேற்றிலிருந்து கட்டாயமாகும். 6,000கும் கூடுதலான புதிய நோய்ச் சம்பவங்கள் கடந்த வியாழக்கிழமை பதிவாகியதைத் தொடர்ந்து பிரான்ஸில் கவலை அதிகரித்துள்ளது.

மே மாதம் முடக்கம் தளர்த்தப்பட்டபின் பதிவாகியுள்ள மிக அதிக எண்ணிக்கை இதுவாகும். மேலும் 32 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,000ஐ நெருங்கிவருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் கடந்த 2 மாதங்கள் காணாத எண்ணிக்கையில் கொவிட்–19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து அங்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் நோய் காரணமாக உயிரிழந்தோரின் மிக அதிக எண்ணிக்கை பதிவான நாடு பிரிட்டன். ஆரம்பக்கட்ட நோய்ப்பரவலை முறையாகக் கையாளத் தவறியதே அதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

பிரிட்டனில் 1,500 புதிய நோய்ச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. அதையும் சேர்த்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 330,00ஐத் தாண்டியது.

மேலும் 12 மரணங்கள் பதிவாகியதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,000ஐத் தாண்டியது.

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை