விமான நிலைய மீள் திறப்பு விரைவில் திகதி அறிவிப்பு

தற்போது அறிவிக்க முடியாது என்கிறார் பிரசன்ன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் திகதியை தற்போதைய நிலையில் உறுதியாக குறிப்பிடமுடியாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

சுகாதார  மற்றும் உலக சுகாதார  தரப்பினரது பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்பட்டே விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும். கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியசர்வதேச நாடுகளில் வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியதென்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். விமான நிலையம் மீண்டும் திறத்தல் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

சுற்றுலாச் சேவைக் கைத்தொழில் இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செலுத்துகிறது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் - 19வைரஸ் தாக்கத்தினால், சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.    வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கும் , அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கமைய பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  காலவரையறையின்றி மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இம்மாதம் திறப்பதற்கு எதிர்பார்த்திருந்தோம். இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சிலும், சிவில் விமான சேவைகள் பிரிவிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். கொவிட்- 19வைரஸ் பரவல் சமூக தொற்றாக பரவலடையும் அபாயகரமான கட்டத்தை நாம் கடந்துள்ளோம். ஆனால் சர்வதேச நாடுகள் ஏதும் இதுவரையில் கொவிட்- 19வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை. 

சர்வதேச நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்படுகிறார்கள். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் விமான நிலையத்தை எப்போது திறப்பதென உறுதியாக குறிப்பிட முடியாதென்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

Wed, 08/19/2020 - 10:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை