பைடனின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக தம்முடன் இணைந்து போட்டியிட கமலா ஹரிஸைத் தேர்வு செய்துள்ளார். 

கலிபோர்னியா மாநில செனட்டரான ஹரிஸ், பைடனுடன் இணைந்து நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக போட்டியிடுவார். 

ஹரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முதல் வெள்ளை இனத்தவரல்லாத தெற்காசிய அமெரிக்கப் பெண்ணாவார். 

55வயதான ஹரிஸின் பெற்றோர் ஜமைக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். குறிப்பாக இவரது தாய் சென்னை நகரைச் சேர்ந்தவராவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதற்குமுன் இரண்டு பெண்கள் மட்டுமே துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர். 

2008ஆம் ஆண்டு அலாஸ்கா மாநில ஆளுநரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாரா பாலின் அவர்களில் ஒருவராவார். மற்றொருவர் 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சிக்காகப் போட்டியிட்ட ஜெரால்டின் பெராரோ ஆவார். இருவருமே தேர்தலில் வெற்றி பெறவில்லை. 

இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஹரிஸ் பொலிஸ் சீர்திருத்தத்தை அதிகமாக வலியுறுத்திவந்தார். துணை ஜனாதிபதியாக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதோடு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

Thu, 08/13/2020 - 14:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை