அரலகங்வில விபத்து; கெப் சாரதிக்கு வி.மறியல்

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து, 11 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில் 16 வயதைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 14 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட 11 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். தெஹியத்தகண்டியிலிருந்து அரலகங்வில நோக்கி பயணித்த கெப் வாகனமானது, பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வந்த இச்சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சாரதியை முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் சட்ட பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த சாரதிக்கு மேற்கொண்ட சுவாச பரிசோதனை மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை ஆகியவற்றில், அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.    

குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தல்களை பொலிஸார் நாடியதாகவும், அதன் அடிப்படையில் குறித்த சாரதி மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Tue, 08/11/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை